Tuesday 24 July 2012

சாந்தி சௌந்தராஜனின் நிலை !


சாந்தி சௌந்தராஜன் 2006 இல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டரில் வெள்ளி பதக்கம் வென்றவர், பாலின சோதனையில் தகுதியிழந்ததால் இந்திய தடகள கூட்டமைப்பால் தடை செய்யபட்டு, இன்று ஒவ்வொரு நாளும் ரூ 200 சம்பாதிக்க செங்கல் சூளையில் எட்டு மணி நேரம் கடினமாக உழைக்கிறார்.


இதே போன்று தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேச்டர் செமென்யா உலக சாம்பியன்ஷிப்பில் வென்று, பின் பாலின சோதனையில் தோற்றார்.அதன்பின் தென் ஆப்பிரிக்கா அரசு அவரின் மானத்தை மற்றும் உலக விளையாட்டு நிலையை பாதுகாக்க போராடியது, விழைவு இப்பொழுது லண்டன் 2012 ஒலிம்பிக்கில் தனது நாட்டின் கொடி தாங்கி விளையாடயிருக்கிறார்.


சாந்தியின் பெயர் மற்றும் சாதனைகளை தடகள பதிவுகளில் இருந்து அழித்துவிட்டனர், இதனால் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.


செங்கல் சூளையில் என் கைகள் வலியால் எரிகிறது, தோல் உரிந்து கொப்புளங்களாக உள்ளன. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன்? என் கையில் இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் தண்டிக்கப்படுகிறேன் என்று ஒரு பத்திரிக்கையில் கூறியுள்ளார்.


அன்றைய முதல்வர் கருணாநிதி ரூ 15 லட்சம் பரிசுடன், ரூ 5,000 சம்பளத்தில் ஒரு பயிற்சியாளர் வேலை கொடுத்தார், பணத்தை சகோதரியின் திருமணத்திற்கு செலவிட்டார். மேலும் அது ஒப்பந்த அடிப்படையில் உள்ள வேலை.


புதுக்கோட்டையில் உள்ள கத்தகுறிச்சியை சேர்ந்த சாந்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஒரு பியூன் வேலையாவது தருமாறு கோரியுள்ளார், பயனில்லை.


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி HYPER-ANDROGENISM கண்டறிய நவீன முறையை அறிமுகபடுத்தியுள்ளது, அதில் இவர் வெற்றி பெற்று மீண்டும் விளையாடு வாய்ப்புள்ளது. இவருக்கு இந்தியாவில் செய்த சோதனை பழைய உள்நாட்டு முறை.


ஆனால் அனைத்திற்கும் முன்பு, சாந்திக்கு ஒரு நல்ல வேலை வேண்டும்.

Saturday 9 June 2012

ராஜு நாராயணசாமி IAS


வாழ்க்கை

ராஜு நாராயணசாமி, கேரளா மாநிலம் சங்கனாசேரியில் 1968'ஆம் ஆண்டு மே 24'ல் பிறந்தவர். இவரைப் பற்றி..
1983'ல் மேல்நிலை பள்ளி தேர்வில் (SSLC), கேரளா மாநில அளவில் முதல் மதிப்பெண்.
1985'ல் பியுசி'ல் (PRE UNIVERSITY COURSE), கேரளா மாநில அளவில் முதல் மதிப்பெண்.
பொறியியல் பட்டதாரி உளச்சார்பு தேர்வில் (GATE) முதல் மதிப்பெண்.
அனைத்து இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ALL INDIA IIT) கணினி அறிவியலில் முதல் மதிப்பெண்.
இந்திய ஆட்சியர் பணி (IAS ) நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்.


இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னையில் இருந்து திரு.ராஜு நாராயணசாமி படித்து வெளியே செல்லும் போதே, அமெரிக்காவில் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனம் (MASSACHUSETTS INSTITUDE OF TECHNOLOGY) ஊக்கதொகையுடன் கூடிய கல்வி வாய்ப்போடு இவரை அழைத்தது, ஆனால் இவர் செல்லவில்லை.

இந்திய ஆட்சியர் பணி

ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த அவர், நமது அரசாங்கம் ஒரு ஐஐடி மாணவருக்கு பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது, அதற்கு பதிலாக நாம் ஏதாவது செய்வது நமது தார்மீக கடமை என்று நம்பினார். ஒவ்வொரு ஏழை மக்களும், பேருந்தில் பயணம் செய்யும் போதும், பெட்ரோல், டீசல் மற்றும் அவர்கள் உடுத்தும் துணி முதற்கொண்டு கலால் மற்றும் விற்பனை வரி செலுத்தும் பணத்தை தான் அரசாங்கம் நமக்கு செலவிட்டது, எனவே இந்த நாட்டின் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இந்திய ஆட்சியர் பணியில் சேர முடிவுசெய்தார். பணம் சம்பாதிக்க அவர் இத்துறையை தேர்ந்தெடுக்கவில்லை என்பது அவரது வாழ்கையின் பின் பக்கத்தை பார்த்ததாலே புரியும். 

பணியில் நேர்மை

நேர்மையான அதிகாரியான இவர், பத்தாண்டு காலத்திற்கு பிறகு இந்திய ஆட்சியர் பணியில் இருந்து கேரளா அரசால் வெளியேற்றப்பட்டார். ஏன் தெரியுமா ?
நேர்மை நேர்மை நேர்மை !!!


ஒரு ரியல் எஸ்டேட் முகவர் ஒரு நெல் வயலை வலைத்துபோட்டார், இது சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒன்று, எனவே விதிவிலக்கு கேட்டு துணை ஆட்சியராக இருந்த திரு.ராஜு நாராயணசாமியிடம் போனார். நேரில் சென்று பார்த்தவரிடம், அந்த முகவரின் செயலால் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து வரும் கழிவு நீர் மற்ற வயல்களில் தேங்கி விடும் என்று 60 ஏழை விவசாய்கள் புகார் செய்தனர், எனவே அதற்கு அவர் அனுமதிக்கவில்லை. இதனால் அரசியல்வாதிகளால் தீவிரமாக நிர்பந்தப்படுத்தபட்டார், இருந்தும் அனுமதி தர மறுத்துவிட்டார். இதுதான் அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட இவரின் முதல் மோதல்.


திரு.ராஜு நாராயணசாமியின் திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மாமனார் ஒரு பொது சாலையை மூடி சுவர் ஒன்றை எழுப்பினார், மக்கள் நாராயணசாமியிடம் முறையிட்டனர், இவரும் பேசி பார்த்தார் பயனில்லை, உடனே காவலர்கள் துணையுடன் சுவரை அகற்றினார், இதன் விழைவு இவரின் திருமண வாழ்க்கை முறிந்தது.


மாவட்ட ஆட்சியராக இருந்த போது 11 கோடி பணம் அரசுக்கு வரி செலுத்தாமல் பதுக்கி வைத்த ஒரு பெரிய மதுபான தொழிற்சாலையை சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்தார். ஒரு அமைச்சர் நேரடியாக அவரை தொலைபேசியில் அழைத்து பறிமுதல் செய்யப்பட்டவைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டார். நாராயணசாமியோ அமைதியாக அது கடினம் என்று கூறிவிட்டார். இதற்கு நீங்கள் பின்னால் வருத்தபடுவிர்கள் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார் அமைச்சர்.


அவரது மாவட்டத்தில் ஏழை விவசாயிகளுக்காக 8 கோடிரூபாய் செலவில் பாலத்துடன் கூடிய ஒரு பொது வழி ஏற்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக 8 கோடி ரூபாய் செலவு செய்ததற்கான ஒரு வடிவில் கையெழுத்திடும் கோப்பு அவரிடம் வந்தது, நேரில் சென்று ஆய்வு செய்து, அது பலவீனமாய் இருப்பதை உணர்ந்தவர், மழைக்காலம் முடித்ததும் இதில் கையெழுத்திடுவதாக கூறிவிட்டார். அவர் எதிர்பார்தததுபோல் மழைகாலத்தில் அது சிதைந்து போனது. மக்களின் பணம் 8 கோடி ரூபாயை காப்பற்றினார் ஆனால் இதன் மூலம் நிறைய எதிரிகளையும் சம்பாதித்தார்.


நேர்மைக்கு கிடைத்த பரிசு

நேர்மையானவர்களை தான் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காதே, எனவே இவரை அரசாங்க விடுப்பில் அனுப்பிவைத்தது, பின் அதிகாரம் இல்லாத பள்ளிகள் மாநில கூட்டுறவு அமைப்பாளராக இவரை அரசு நியமித்தது. இதுதான் நேர்மையான ஒரு அதிகாரிக்கு நமது அரசியல்வாதிகள் தரும் பரிசு. மத்திய அரசிடமாவது மாற்றலாகி போகலாம் என்றால், அதையும் இவர்கள் தடுத்து வைத்துள்ளார்கள். இப்பொழுது கேரளா அரசின் இளைஞர் விவகாரத்துறை செயளராக உள்ளார்.


இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று, படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த கல்வி அமைப்பு இவரை அழைத்தும், மக்களுக்காக சேவை செய்ய நினைத்து இன்று குடும்பம், பதவி என அனைத்தையும் இழந்தும் தனது கொள்கையில் விடாப்படியாக உள்ளார்.

இவர் இதுவரை 23 புத்தகங்கள் எழுதியுள்ளார், கேரளா அரசின் சாகித்ய அகடமி விருதையும் ஒரு முறை வென்றுள்ளார்.

Friday 8 June 2012

சாலுமருத திம்மக்கா !!


சாலுமருத திம்மக்கா !!

சாலுமருத திம்மக்கா என்றால், கர்நாடகாவுக்கே தெரியும் ! 80 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில், சுமார் 4 கிலோ மீட்டர் சாலை நெடுக இருபுறங்களிலும் 284 க்கும் மேற்பட்ட ஆலமரங்களை நட்டவர். இவர் பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில் உள்ள கூதூர் கிராமத்தில் வசிப்பவர்.


முன்பு வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட கூதூர் கிராமம் இப்பொழுது  குளிர்ந்து காணப்படுகிறது என்றால் அதற்கு இவர் நாட்டிய மரங்கள் தான் காரணம். 284 க்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன.


இவர் ஏன் இத்தனை ஆலமரங்களை நட்டார், இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது எதனால் ?

சாதாரண கிராமத்து பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 101 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.


பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும், உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார். இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.


ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார். வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.


மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார். அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார்.


ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க !! கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார். இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.


இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து. பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது. என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.


100 வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.


இவர் பெற்ற விருதுகளில் சில

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாண்ட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு, திம்மக்கா சுற்றுச்சூழல் கல்வி வளங்கள் என்று அவரது பெயரால் இப்பொழுது அழைக்கபடுகிறது.


சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
  • ஹம்பி பல்கலைக்கழகம் வழங்கிய நடோஜா விருது - 2010. 
  • தேசிய குடியுரிமை விருது - 1995.
  • இந்திரா பிரியதர்ஷணி வ்ரிக்க்ஷமித்ரா விருது - 1997.
  • வீரசக்ரா ப்ரஷஸ்தி விருது - 1997.
  • கர்நாடகம் கல்பவல்லி விருது - 2000.
  • கோட்ஃப்ரே பில்லிப்ஸ் வீர விருது - 2006.
  • வாழும் கலையின் விசாலாக்ஷி விருது.
நன்றி: SVS

Tuesday 5 June 2012

சூரிய சக்தி மின்சாரம் !!


சூரிய சக்தி மின்சாரம் !!

சூரிய சக்தி மின்சாரத்துக்கான முதலீடு என்பது அரசுக்கோ / தனிநபருக்கோ நீண்ட காலப் பயன்பாட்டுக்கான முதலீடாகவே இருக்கும். ஒரு முறை நாம் சோலார் பேனல் அமைத்து விட்டால், அது 25 ஆண்டுகளுக்குக் குறையாமல் மின்சாரம் தரும். பேட்டரியும் இன்வெர்ட்டரும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் வரை உழைக்கும். இதற்கு நாம் செலவழிக்கிற தொகையை இரண்டு வருடங்களில் மீட்டுவிடலாம். மேலும், மூலப்பொருள் தீர்ந்துபோகும் என்ற அச்சமே இல்லை. சோலார் பவர் என்றதும் மக்கள் தயங்குவதற்கு காரணம், அதனுடைய விலைதான். வீடுகளில் 1 கே.வி., திறனுள்ள "சோலார் பிளான்ட்’'கள் அமைக்க ரூ.2 லட்சம் செலவாகும். இதற்கு 81 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது.


சூரிய மின்சாரத்தை நாம் இரண்டு வகையாகப் பயன்படுத்தலாம். ஒன்று ஆன் கிரிட், இன்னொன்று ஆஃப் கிரிட். ஆஃப் கிரிட் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் டைரக்ட் கரன்ட்டாக பேட்டரியில் சேமிக்கப்பட்டு பின் இன்வெர்ட்டர் மூலம் அல்டர்நேட்டிவ் கரன்ட்டாக மாற்றப்பட்டு இரவும் கூட உபயோகத்துக்கு பயன்படுத்துவது. ஆன் கிரிட் என்பது நாம் தயாரிக்கிற மின்சாரத்தை கிரிட் மூலம் அரசுக்கோ இல்லை தனியாருக்கோ விற்பது ஆகும்.


புரட்சி செய்த குஜராத் அரசு

குஜராத்தில் உள்ள நர்மதா நதியின் கிளைக் கால்வாய்த் தண்ணீர் வீணாக ஆவியாவதை தடுத்து, அதே நேரம் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் புரட்சிகரமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்திருக்கிறார் நரேந்திர மோடி.


சூரிய மின்சாரம் பெறுவதற்கான போட்டோவோல்டிக் தகடுகளைப் பொருத்துவதற்கு நிறையவே இடம் தேவைப்படும். இதை தவிர்ப்பதற்காகத்தான், கால்வாயின் மீது தகடுகளை அமைத்திருக்கிறார்கள். நிலத்தில் வைக்கப்படும் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைவிட, 15 சதவிகிதம் கூடுதல் மின்சாரம் கால்வாயின் மீது வைக்கபடுவதால் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.


முதல் கட்டமாக 750 கி.மீ தூரத்துக்கு நீண்டு இருக்கும் சானந்த் - கடி நர்மதா கிளைக் கால்வாயின் மீது 'சோலார் பேனல்’ எனும் போட்டோவோல்டிக் தகடுகளை வைத்து, அதில் இருந்து வருடத்துக்கு சுமார் 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிப்பதுதான் திட்டம். இந்தத் திட்டத்துக்காக அந்த நதியில் இருந்து பிரியும் மொத்தக் கால்வாய்களையும் பயன்படுத்த யோசித்து வருகிறது குஜராத். அவற்றின் நீளம் 85,000 கி.மீ. இதில் 10 சதவிகிதத் தூரத்தை மட்டும் பயன்படுத்தினாலே, 2,200 மெகா வாட் ( கூடங்குளத்தின் மொத்த உற்பத்தி திறனே 4000 மெகா வாட் தான் ) மின்சாரம் தயாரிக்க முடியும்.


இதன் மூலம் 11,000 ஏக்கர் நிலப்பகுதி காப்பாற்றப்படும். மேலும் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதன் காரணமாக, வருடத்துக்கு சுமார் 2,000 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படும்.


தமிழகத்தால் முடியுமா ?

தமிழகக் கால்வாய்களின் மீது சோலார் பேனல் வைத்து நம்மாலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இங்கே ஒரு வருடத்தில் சுமார் 300 நாட்கள் சூரிய வெளிச்சம் அபரிமிதமாகக் கிடைக்கிறது. இங்கே ஒரு சதுர கிலோ மீட்டரில் ஆண்டுக்கு சுமார் 35 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கலாம்.


உடுமலைப்பேட்டையில் இருந்து, மூணார் செல்லும் வழியில் அமைந்துள்ள சம்பக்காடு அருகே உள்ள தளிஞ்சி என்கிற மலைவாழ் மக்கள் கிராமத்தில் மின்சாரம் கிடைப்பது முழுக்க முழுக்க சோலார் சக்தியில்தான். சூரிய வெளிச்சம் கிடைக்காத மழை காலங்களில் ஆடு, மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து, மின்சாரம் பெறுகிறார்கள்.


தமிழகத்தில் காற்றாலை மூலம் 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் என, வெளிநாட்டு கம்பெனிகள் தெரிவிக்கின்றன. இங்கு மின் உற்பத்தி செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர்.


சிறப்பம்சங்கள்

சூரிய சக்தி மின்சாரத்தால் சுற்றுசூழளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, ரசாயன கழிவுகளும் இல்லை. மேலும் இந்திய அரசால் சில வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி மின்சாரத் திட்டத்தில் 2020-ல் 20,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 4,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து விட்டோம். ஆனால், 1960-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு மின் நிலையங்கள் இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் 4,000 மெகா வாட் மின்சார உற்பத்தியை நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே சூரிய சக்தியை நாடுவோம், பயன் பெறுவோம்.

Sunday 3 June 2012

ஜி. டி.நாயுடு !!


வாழ்க்கை

ஜி. டி.நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த


இவர், விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர், தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.


ஆரம்ப தொழில்கள்

வாலிப வயதில் மருந்து வியாபாரம் செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார். சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.


அப்போது முதலாம் உலக போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.


கைகூடிய தொழில்

மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தை கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார். முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.


தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.


தொழிலில் சாதனை

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும்.


மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.


அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.


வியக்கவைக்கும் மற்றும் பல சாதனைகள்

வெளிநாட்டு தொழில் நுட்ப திறன்களை நேரில் கண்டறிந்து, அதைப்போன்ற தொழில் நுட்ப கருவிகளை உருவாக்கினார். புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.


நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.


பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.


அதற்கு அவர் கூரிய காரணம் ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.


விவசாயத்திலும் சாதனை

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில.


சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன! அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.


அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.


தனது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை என்பதற்காக, 1953-ல் சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, மறைந்த ஈ.வெ.ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் முன்னிலையில் ரேடியோக்களையும் மற்றும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கி பரபரப்பை உண்டாக்கினார்.


சமுக சேவைகள்

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.


அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.


இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கோவையில் துவக்கிய பெருமை இவருக்கே சேரும் . ரத்தக்கொதிப்பினாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டவர் 1974 ஆண்டு ஜனவரி நான்காம் நாள் இயற்கை எய்தினார்.

இசைஞானி இளையராஜா !!


இசைஞானி இளையராஜா !!

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசைஞானி இளையராஜா, தனது 30 வருட இசை வாழ்கையில் 950 மேலான படங்களுக்கு, 4500 மேலான பாடல்களை இயற்றியவர், இன்றும் இயற்றிகொண்டிருப்பவர்.

இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணயபுரத்தில் 1943 ஆம் வருடம் சூன் 2 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன் (எ) ராசையா ஆகும். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். இவர் மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி.

இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் மற்றும் கிட்டார் வாசிப்பதில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்குபெற்றிருக்கிறார்.

இவர் 1969 ஆம் ஆண்டு தனது 29 ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் (CLASSICAL GUITAR - HIGHER) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவரின் சாதனைகள் உலகறியும். 1993 ஆம் ஆண்டு லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் இசையமைத்ததன் மூலம், ஆசிய கண்டத்திலேயே அங்கு இசைத்த முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை பெற்றார். அங்கு இசைத்தமுதல் " மேஸ்ட்ரோ " என்று அழைக்கப்படுகிறார்.

2003 இல், பிபிசி 155 நாடுகளில் எடுத்த சர்வதேச கணக்கெடுப்பில், உலகில் என்றும் சிறப்பான பத்து பாடல்கள் என்னும் பிரிவில், 1991 இல் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த தளபதி படத்தின் ராக்கம்மா கைய தட்டு பாடல் தேர்வானது.

2010 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதுரங்க வீரர் விசுவநாதன் ஆனந்த் !!



சதுரங்க வீரர் விசுவநாதன் ஆனந்த் !!


நமது பெருமைக்குரிய தமிழரான, விசுவநாதன் ஆனந்த் சென்னையில் 1969ஆம் வருடம் டிசம்பர் 11’ல் பிறந்தவர். இவர் இதுவரை ஐந்து முறை உலக சதுரங்க (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வென்று சாதனை படைத்தவர். முதன் முதலில் 1983இல் தனது 14 வயதில் இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் . தனது 15 வயதில் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் வென்றார். தனது 16 வயதில் மேலும் இருதடவை இந்தவிருதைப் வென்றார்.


1987இல் முதன் முதலில், உலக இளநிலை வாகையாளர் (WORLD JUNIOR CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். மேலும் 2000ஆம் ஆண்டில் தெகரானில் நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம் உலக சதுரங்கப் (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அடைந்தார். மேலும் 2007, 2008 மற்றும் 2010லும் உலக சதுரங்க வாகையாளர் (WORLD CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்றார்.


இப்பொழுது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இஸ்ரேலின் போரிசு கெல்பண்டை சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலம் ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.


இதுவரை 50கும் மேற்பட்ட சர்வேதச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ள இவர் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் BOOK OF THE YEAR விருது, பத்மபூஷன், சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008), பத்மவிபூஷன் விருது ஆகிய விருதுகளை பெற்றவர்.